ராகவேந்திரர் நாம மகிமை!!

Image: Guru Ragjavenndra Swami

1. ராகவேந்திரர் நாமம் தன்னை நாளும் இங்கே ஜெபிக்கவே!
க்ஷேமம் உண்டாம்! ஜெயமும் உண்டாம்! ஜெகமெலாம் அருள் தழைக்கவே!!

2. நாதன் நாமம் நாளும் பாட, நலமும் வளமும் கொழிக்கவே!
வேதம் போலது விழைந்து சொல்பவர், வெற்றிக்கும் வழி வகுக்கவே!!

3. எடுத்த செயல்கள் அனைத்தும் இங்கே வெற்றி பெறவே நாடுவோம்!
எனையும் காக்கும் இறைவன் நாமம் இனிய தமிழில் பாடுவோம்!!

4. நாளும் கோளும் நலமே செயவே நயந்து இங்கே நாடுவோம்!
நல்லதே செய நாடும் உள்ளம் நாளும் வளரப் பாடுவோம்!!

5. துங்கபத்ரா நதியின் கரைதனில் தோன்றும் துணைவனை நாடுவோம்!
இங்கே இன்றே என் முன்னே வர இசைந்த குருவினைப் பாடுவோம்!!

6. காலம் காலமாய் உலகைக் காக்கும் கருணைதனையே நாடுவோம்!
கற்றதும் மனம் களிப்பதும் தரும் கன்னித் தமிழில் பாடுவோம்!!

7. ஞாலம் போற்றிடும் ஞானம் தந்திடும் நாதன் அருள் தனை நாடுவோம்!
நல்லதும் செய வல்லதீதென நாமும் அறிந்ததைப் பாடுவோம்!!

8. மனிதராய் இங்கு பிறர்க்கு நலம் தரும் மனமதும் வேண்டி நாடுவோம்!
புனிதம் நாமம் புவனம் காக்கும்; போற்றிப் புகழ்ந்து பாடுவோம்!!

9. இல்லம் காக்க ஏற்றதீதென எனக்கும் உரைத்திட்ட நாயகன்!
சொல்லும் செயலும் வேற்றுமையின்றி சுகம் தரும் வழியுரைப்பவன்!!

10. மன இருள்தனை நீக்கி அருளும் மகிமைதனையே நாடுவோம்!
அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் புகழ்தனைப் பாடுவோம்!!

11. பொன்னும் மணியும் புவனம் போற்றும் புகழும் நமக்கே தருபவன்!
இன்னலகற்றி இன்பம் தருவான்; இணையடிதனை நாடுவோம்!!

12. மண்ணதும் இங்கு மருந்தென்பார் அவர் மகிமைதனையே அறிந்தவர்!
உண்ணும் ஒவ்வோர் கணமதும் இங்கு உயர்ந்ததாகிட வேண்டுவோம்!!

13. ஈசனிடத்தெம்மை இட்டுச் செல்லும் ஏணியாகும் நாமமே!
காசினியிற் கண்கண்ட தெய்வமாய் எமைக் காக்கவென்றே வேண்டுவோம்!!

14. பஞ்சபூதம் இட்ட பணியும் செய்யுமவர் பக்தர் ஓர் சொல்லும் சொல்லவே!
தஞ்சமென்றவர் தாளைப் பணிந்தவர் தகுதி ஈதெனச் சொல்லவோ!!

15. விஞ்சையர் குலம் விழைந்தெமைத் தொழ வேண்டும் வரமதும் தருபவர்!
நஞ்சும் அமுதாய் நலமதும் தர நல்லருள் தரும் நாயகர்!!

16. பாடிப் பணிந்தவர் பக்தியுடன் சொலப் பரமனவன் திரு நாமமே!
கோடிப் புண்ணியம் குவலயத்திடை கொண்டு தரக் கொண்டாடவே!!

17. எட்டு நூறு ஆண்டுகள் இங்கு எம்மனோர்க்கருள் செய்பவன்!
அட்டமா சித்தி அனைத்தும் பெற்றிட அருள் புரிந்தெமை அள்பவன்!!

18. அருளும் தருவான்; பொருளும் தருவான் அவன் திருவடிதனைப் பணிந்திட!
வரமும் விழைந்தது வணங்கித் துதிப்பவர் வள்ளல் அருளால் பெறுவரே!!

19. குருவும் அவரென்று கொண்ட குலமதும் குவலயந்தன்னில் தழைத்திட,
திருவும் கல்விச் செல்வமும் தருவான்; திருவடிதனைப் போற்றுவோம்!!

20. துன்பம் தவிர்த்து, தொடர்ந்து நாளும் துணையென இங்கு வருபவன்!!
தூயவன் அவன் பாதம் பணிந்து தொடங்கும் செயலும் வெற்றியே!!

21. பிணியும் நோவும் பிறவும் விலக்குவார் பெற்றதாயினும் அன்புடன்;
பணிவதே நாம் பயன் பெற நற்பாதையாகிட விரும்புவோம்!!

22. மங்கலம் தரும்; மனமும் மகிழ்ந்திட மக்கட் செல்வமும் தந்திடும்!
எங்கள் குருவாம் ராகவேந்திரர் இணையடிதனைப் போற்றுதும்!!

23. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட பொழிகுவான் அவன் அருள்தனை
எங்கள் இல்லம் என்றும் சிறக்க இசைத்து நாளும் மகிழுவோம்!!

பாரோர் புகழ்ந்தேத்தும் நாராயணன்


பாடல் 1 மெட்டு: நாராயணா நின்ன நாம ஸ்மரணை

நாராயணா என்றுன் நாமந்தனை தினமும்,
பாராயணம் செய்வார் (அவர்) பதமலர் பணிந்தெழுந்தேன்!
(நாராயணா)

நாலயிரம் முறையும் நாதன் உந்தன் நாமம் சொல்வார்!
நயந்தவர் உறவதுவும் நாடிட மனம் விழைந்தேன்!!

(நாராயணா)

வாரணம் சூழ, வரிசங்கம் நின்றூத,
நாரணன் கைப்பிடித்த நங்கையவள் பாடும் தமிழ்!
தேனினும் இனியதென, திருப்பாவைப் பாடல்களை;
நானும் உவந்து பாட, நல்ல நாளுமிங்கே வந்ததுவே!!

(நாராயணா)

பாடல் 2 மெட்டு: பாவமுலோனா
மாலவன் திருநாமம், மனதினில் நினைந்துருகி,
ஞாலமெலாம் போற்றும் திருநாளுமிதுவல்லவோ!

(மாலவன்)

கோலமயில் நப்பின்னை அவள் கூடலின் தனை மறந்த
நீலவண்ணனை எழுப்ப, நங்கையர்கள் நித்தமும் கூடிப்பாடும்

(மாலவன்)

ஆண்டவனின் அருள்தனையே அனுதினமும் நாடி
ஈண்டு இப்பாவைகள் இனிய தமிழில் பாடி (தன்) மெய்
தீண்டுபவர் நாளுமிங்கு திருமாலின் அடியவராய்
வேண்டிடுவார் அவர்தம் வேண்டுதலும் நலம் தரவே!!

(மாலவன்)

பாடல் 3
புள்ளினங்கள் இசை பாடப் பொழுதும் புலர்ந்தது!
வள்ளலவன் கோவிந்தன் புகழ் வாழ்த்திட வாராய் நெஞ்சே!

(புள்ளினங்கள்)

மார்கழி பிறந்ததென்று மங்கை நல்லார் மனமகிழ்ந்தார்
மாலவன் திருநாமம் மனமுவந்து பாட

(புள்ளினங்கள்)

ஓங்கி உலகளந்த உத்தமனின் நாமம் சொல்லி
தீங்கின்றிப் பிறர் வாழத் திருவருள் வேண்டிடுவார்
ஆங்கவர் திருவடியை அனுதினம் தொழுதெழவே
பாங்காய் உலகாளும் பக்குவமும் ஈதென்பேன்!!

(புள்ளினங்கள்)

பாடல் 4
வையாவூர்த் தலமுறையும் அய்யா உந்தன் சேவை
செய்யாத நாளுமுண்டோ! சிறப்பதும் அது தருமோ!!

(திருவையாவூர்த்)

எய்யாத பேறுமுண்டோ; இறைவன் உந்தனைப் பாட
உய்ய வழியருளும் உலகளந்த நாயகனே!!

(திருவையாவூர்த்)

செய்யும் எச்செயலும் இங்கு சிறப்பதனை எனக்கருள,
வையம் தழைக்க நல்ல வரமருளும் உனை எண்ணாது,
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நினைப்பின் நல்லுடை தரியோம்;
பொய் சொல்லோம்; நின் நாமம் புகல மறப்போமோ!

(திருவையாவூர்த்)

பாடல் 5
நித்ய கல்யாண வைபவா! நெஞ்சம் விழைந்து,
நின்னருள் நாடி வந்தோம்! நினைக்கும் வரம் தா!!

(நித்ய கல்யாண)

சத்தியம் ஈதென்றே, நின் சன்னதி தேடி வந்தோம்,
சகல செளபாக்கியமும், நற் சந்ததியும் நீயருள்வாய்!!

(நித்திய கல்யாண)

மணவினை இனிதாக மங்கலங்கள் நிரந்தரமாய்த்
துணையொன்று வேண்டி உன்னைத் துதித்திடும் அடியார்கள்
தொடர்ந்தெல்லா நலன் பெறவும், துயரம் தவிர்த்திடவும்,
தொடங்கிய காரியமும், நீ துணை நின்று நடத்திடவே!!

(நித்திய கல்யாண)

பாடல் 6
திருநீர்மலை வளரும் தெய்வம் உனைத் தொழவே!
வருவார் அடியாரவர் வாழ்வதும் வளம் பெறவே!

(திருநீர் மலை)

உருவாகும் பல்லுயிரும் உயர்ந்திட வழியுரைக்கும்
கருவான நாள் முதலாய் அதனைக் காத்தருளும் சிறப்பின்

(திருநீர் மலை)

திருவருளும் நற்பேறும், தினமுமிங்கே எமைச் சேர,
பெருவாழ்வு எமக்கருளும் நின் பேரருளைப் பாடி வந்தோம்!
அருள்வாய் நீ எமக்கென்றே அனுதினமுன் புகழ் பாடும்,
அடியார் குலம் தழைக்க, ஆண்டருளும் இறையே!!

(திருநீர் மலை)

பாடல் 7
விருத்தம்

கோவிந்தா என்று சிறு குழந்தையும் பாடி வந்தால்,
வா இங்கே என்னருகில் என்று வரமருள்வான் வெங்கடேசன்!!
தாயெனவே எம்குறையும் தானாகத் தீர்த்து வைப்பான்!
மாயப் பிறப்பழிக்கும் திருமன்னார்குடிப் பேரழகன்!!

பாடல்

நலம் யாவும் எமக்கருளும் நாராயணா!! உந்தன்
நாமந்தனைப் பாடிடுவோம் நாராயணா!!

(நலம் யாவும்)

வளமான வாழ்வதனை நாராயணா! உன்னை
வணங்கிடுவார் தமக்கருளும் நாராயணா!!

(நலம் யாவும்)

உளமார ஒரு பொழுது நாராயணா! என
உரைப்பவர்க்கும் வாழ்வு தரும் நாராயணா!
நாராயணா! லக்ஷ்மி நாராயணா! நாராயணா! சத்ய நாராயணா!!

(நலம் யாவும்)

பாடல் 8
பாரோர் புகழ்ந்தேத்தும் நாராயணன் நாமம்,
பாவையர் தினம் பாடிப் பறை கொள்ளவே மகிழ்வார்!

(பாரோர் புகழ்ந்தேத்தும்)

கார்வண்னன் நட்பதனை நாடும் காரிகையர் மனம் மகிழ
சீர்வரிசை பல செய்து, அவர் சிந்தை மகிழச் செய்வான்!!

(பாரோர் புகழ்ந்தேத்தும்)

நெய்யூற்றித் திருவிளக்கும் நித்தமும் ஏற்றி வைப்பார்!
நீலவண்ணன் திரு நாமம் நெஞ்சிறுத்தித் தவம் செய்வார்!!!
பொய்யாது அருள் புரியும் புண்ணியனைப் பாடி நிற்பார்!
கையெடுத்துக் கும்பிடவும் கருணை செய்யும் தெய்வம்!!

(பாரோர் புகழ்ந்தேத்தும்)

பாடல் 9
திருப்பதி மலை வாழும் தெய்வம் உனைத் தொழுவார்;
தினமிங்கு வரும் அடியவர் அவர் விருப்பமும் அருள்புரிவாய்!!

(திருப்பதி)

ஏழுமலை சூழ இங்கு இசைந்து குடிகொண்டாய்!
இறைவன் உன் நாமந்தனை இசைப்பதும் பேறெனவே!!

(திருப்பதி)

வாழும் வழி ஈதென்று எம்மை வழி நடத்தும் இறைவன்;
வணங்கிப் பணிந்தார் வேண்டும் வரமதும் அருள் தலவன்!!
ஆழாழி சூழும் இந்த அகிலமும் பயனுறவே
அனுதினம் கோவிந்தா என்போர் அகமதும் மகிழ்ந்திடவே!!

(திருப்பதி)

பாடல் 10
பாரோர் புகழ்ந்தேத்தும் நாராயணா! உந்தன்
பாதம் பணிந்து நித்தம், பரவி நிதம் தொழுதோம்!

(பாரோர்)

சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமியர்காள்
சிந்தை கலந்து நாளும், செந்தமிழில் பாடி வந்தார்!!

(பாரோர்)

வாராத சுகமுண்டோ வள்ளலுந்தன் நாமம் சொல்லி
வணங்கித் துதித்திடுவார் வாழ்வில் நிரந்தரமாய்
பேறுகள் அனைத்தும் தரும் பெயரிது என்றறிந்தோம்
வேறோர் தெய்வம் உண்டோ! (அடியார்) விருப்பத்தின் அருள் செய்யும்

(பாரோர்)

கனவில் வந்தவன் - சந்தக்கவி செபரா

கனவில் வந்த குழந்தை, கந்தனா அல்லது கண்ணனா எனத் தெளியாத ஒரு தாயின் மனம், தன் கனவில் கண்ட குழந்தையின் குணாதிசியங்களைக் கருத்தில் கொண்டு, இது கந்தனென்றும், கண்ணனென்றும் மாற்றி மாற்றிப் பாடலாகப் பாடுகிறது. முடிவில் கந்தனாயிருந்தால் என்ன, கண்ணனாயிருந்தால் என்ன, அது இறை வடிவம்; தனது கனவில் வந்த புண்ணியத்தைப் பாடிப் பாடி மகிழ்கிறது. நனவில் என்று அந்தப் புண்ணியம் வாய்க்கும்? என்ற கேள்வியுடன் முடிகிறது. இதன் அடிப்படையில் இத்தொகுப்பு அமைகிறது.

இப்பாடல் நாட்டிய வடிவாக மாற்ற ஏற்றபடி அமைக்கப்பட்டிருக்கிறது.

கண்ணனாக ஒரு குழந்தையும், கந்தனாக ஒரு குழந்தையும் வேடமிட, கனவு காணும் தாயாக (ஒருவரோ அல்லது இருவரோ) நாட்டியமாக நல்ல பாவங்கள் காட்டி ஆடுவதாக, என்னால் மனக்கண்ணில் காண முடிகிறது.

இசை நிகழ்ச்சியில் குழந்தைகள் பாடவும் உடன் ஆடவும் விழைந்தால், இதனைப் பாடலாம், ஆடலாம். நல்ல பாடலாசிரியர் இதற்குத் தக்க ராகம் அமைக்கலாம். அனுபல்லவியினை இரு முறை பாடலாம். கமகங்கள்/நிரவல்கள், அவரவர் கற்பனா சக்தியினைப் பொறுத்தது.

இப்பாடலை இதை எழுதிய கவிஞரினின் இனிய குரலிலேயே ராகத்துடன் பாடக் கேட்டு மகிழவும் பதிவிறக்கவும்

இங்கே சொடுக்கவும்.




1. கனவில் வந்தவன் கந்தனா? கண்ணனா?

இனிதாய் என் கனவதனில், இறைவன் வந்தான்! மனம்
இசைந்தது இதுவென்றேன்; இனிதென வரம் தந்தான்!! - இங்கு (இனிதாய்)

கனி வேண்டித் தவமிருந்த, கந்தனைப் போலிருந்தான்!
கார்மேக வண்ணன் எங்கள், கண்ணனையும் போலிருந்தான்!! இங்கு (இனிதாய்)

கண்ணனோ கனி வேண்டும் கந்தனோ யானறியேன்!!
எண்ணமெல்லாம் நிறைந்தான்! எழிலார்ந்த உருவம் கொண்டான்!
உண்ணுவதும் அவன் நாமம்! உவகைக்கோர் எல்லையில்லை!!
பண்ணதனில் பாடும் எனைப் பாராதிருப்பானோ!! இங்கு (இனிதாய்)

2. வந்தவன் கந்தனே!!

குழந்தையாய் வரும் இறைவன், எங்கள் குமரன் என்பேன்! மனக்
குறையினைத் தீர்த்து வைக்கும், குன்றுதோறாடும் செல்வக் (குழந்தையாய் )

சிறப்பின் மனம் விழைந்த, செல்வமதும் அளித்தவனை,
பிறப்பெடுத்த புண்ணியம், (தினம்) பேசிடும் பேறு பெற்றேன்!! இங்கு (குழந்தையாய் )

செல்வக்குமரன் நாமம், செப்பிடுவதும் பேறே!! எங்கள்
இல்லம் சிறக்க வந்தான்: எந்தன் இதயம் விழைந்தவாறே!!
நல்லதும், வல்லதும் நான் விரும்பும் நல் வாழ்வும்,
நாளும் எமக்களிக்கும் நாதன் அவன் என்பதனால்!! இங்கு (குழந்தையாய் )

3. வந்தவன் கோவிந்தனே!

கோவிந்தா என்றேன் நல்ல கொஞ்சு தமிழ்ப் பாடல்தன்னில்,
சேயெந்தன் அருகில் வந்தான்! சிந்தை மகிழ்ந்து நானும் (கோவிந்தா)

கண்ணனிவன் தெய்வமென்பார்! இரு கரங்கூப்பிக் கை தொழுவார்
எண்ணுபவர் உள்ளம் போல, இனிய பல உருவங்கொள்ளும் (கோவிந்தா)


மதலையாய் வந்தானெங்கள் மனங்கவர் கள்வனவன்
இதழோடு இதழ் பதித்தான்! இனியதோர் அனுபவமே!
குழந்தையாய் அன்று அந்த கோகுலந்தன்னில் செய்த
குறும்பினை எண்ணுகையில் கோபியராய் எனை நினைத்தே! (கோவிந்தா)


4. இல்லையில்லை வந்தவன் வடிவேலனே!!

வந்தான் இறைவனெங்கள் வடிவேலனே! அருள்
தந்தான் எனைக் காக்க, தயவுடன் மனம் விழைந்தே! (வந்தான்)


கந்தா என்றேன் என்னைக், கருணையுடன் பார்த்தான்!
செந்தாமரை விழியால் சிரித்துக் கொண்டே பேச (வந்தான்)

எந்தாயும் எனையாளும் இறைவனும் அவனாக,
என் மடி மீது வளர் இனியதோர் குழந்தையுமாய்,
செந்தேன் இதழ் குவித்து சிரித்தான்; முத்தம் தந்தான்!
சொந்தம் இது எனக்கு, சுகம் தரும் அனுபவமே!! (வந்தான்)


5. மண்ணை உண்கின்றான்! மாயம் செய்கிறான்! இவன் கண்ணனே!
வெண்ணையும் கேட்பானோ, வேலவனே!. கேட்டதனால்,
கண்ணனே இவனென்பேன்; கண்டு கொண்டேன் நானே! (வெண்ணையும்)


மண்ணையும் உண்ணும் வாயான், என் மனமது அறிந்தவரை
திண்ணமாய் இவன் கண்ணன்; தெரிந்து கொண்டேன் நானே! (வெண்ணையும்)


மாயமெல்லாம் செய்கிறான்! மறைந்து விளையாடுகிறான்!
சேயிவன் கண்ணனேதான் செப்பிடுவேன் உறுதி!
ஆயன் கோபாலன் என்பேன்; அழகில் கரு நிறத்தானவனாய்
ஆனதனால் இவனும் எங்கள் அறுமுகன் இல்லையென்பேன்! (வெண்ணையும்)


6. இவன் நீல மயில் வாகனனே!

குறுநகைதனைக் காட்டிக் கொஞ்சி விளையாடி வரான்!
அறுவரின் மடி தவழ்ந்த அழகனிவன் என்பேன்! (குறுநகைதனைக்)


செந்தாமரை போலும் சிவந்த நிறத்தழகன்!
எந்தாய் எனக்குரைத்த இனிய தமிழ் பேசுகிறான்!! (குறுநகைதனைக்)


வேழமொடு சிங்கமும், வெம்புலி, கரடியுமாய்,
தோழமையுடன் பழகும், தோற்றத்தில் வேடனைப் போல்,
வஞ்சிக் குறமாதர் கொஞ்சும் வடிவேலனிவன்; என்
நெஞ்சம் அறிந்தவரை நீல மயில் வாகனனே!! (குறுநகைதனைக்)


7. மயிற்பீலியசைய நடந்து வரும் இவன், கண்ணனே!

வண்ண மயிற்பீலியதும் வளர் தென்றலில் ஆடிவர,
கண்ணனவன் நடந்து வரக் கண்டதுவும் தவப்பயனே!! (வண்ண மயிற்பீலியதும்)


எண்ணமிட்டேன் யசோதை அன்று என்னனதவம் செய்தனளோ!
பண்ணதனில் மோகனமாய்ப் பாடிவரும் இவனைப் பெற (வண்ண மயிற்பீலியதும்)


செங்கமலக் கால் பதித்துச் செல்வனவன் நடந்து வரான்!
எங்கள் இல்லம் கோகுலாமாய், இசைந்திங்கு மகிழ்ந்திருக்கும்!!
கார்வண்ணன் என்பதனால், கண்ணனிவன் என்று சொன்னேன்!
பேர் சொல்லிப் பாடுவதும் பேரின்பம் என்றாள் பாவை!! (வண்ண மயிற்பீலியதும்)


(1 தேவகி பெற்றவளாயினும், யசோதையே பேறு பெற்றவள்)

8. என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்

என்னமாய்ச் சிரிக்கின்றான்! எழில் முருகன்! அழகைச்
சொன்னவர்கள் யாருமுண்டோ சுந்தரத் தமிழினிலே!! (என்னமாய்ச்)

முன்னரே அறிந்தவன் போல் முறுவலித்தான்! இதழில்
முத்தமிட்டேன்! சுகத்தை முன்னெப்போதும் கண்டதில்லை!! (என்னமாய்ச்)

பொன் போலும் ஒளிர் மேனி; (கமலப்) பூப்போல் மலர்ந்த முகம்;
மின்னும் இரு கண்கள்; மேவும் நற்பல்வரிசை;
அகன்ற திண்தோள் தவழும் அலையெனக் கருங்கூந்தல்;
அறுமுகனின் திருவுருவம் அகலாதென் நெஞ்சை விட்டு!! (என்னமாய்ச்)

9. கொஞ்சும் சலங்கை பாட, வருபவன் குமரனா? குழலூதும் கண்ணனா?

கொஞ்சும் சலங்கை (இசை) பாடக் குமரனவன் ஆடிவரான்!
நெஞ்சமதும் அவனழகில், நித்தமும் மயங்குதடி!! (கொஞ்சும்)


அஞ்சுகம் போல் பேசுகிறான்! அழகு மயிலேறி வரான்!
தஞ்சம் என்று எந்தன் மடி, தானாகத் தேடி வந்தான்!! (கொஞ்சும்)


தாயென எனை வரித்தான்; தாளாத ஆசையினால்,
சேயிவனைத் தாலாட்டும், திருவருள் கிட்டியதே!
மாயங்கள் செய்கின்றான் மறைந்து விளையாடுகின்றான்!
ஆயன்குடிப் பிறந்த அழகனும் இவனாமோ!! (கொஞ்சும்)


10. மகர குண்டலமாட நடந்து வரும் இவன் கண்னனா? கந்தனா?

மகர குண்டலமாட இளமாறனைப் போல் நடந்து வரான்!
சுகமான அனுபவமே! நாமம் சொல்லச் சொல்ல அது தருமே!! (மகர)

நீலவண்னப் பட்டுடுத்தி, மிக நேர்த்தியாய் நடந்து வரான்!
கோல மயிலேறி வரும் அழகுக் குமரனையும் போல வரான்!! (மகர)

என்ன இந்தக் குழப்பமிது! குழந்தை யாரானால் என்ன இங்கு!
மன்னவனைப் போலிங்கென் மனதினில் இடம் பிடித்தான்!!
கண்ணனோ கந்தனோ எந்தன் கனவினில் வந்தவனும்
எண்ணத்திலே நிறைந்த பின்பு யாரானால் என்ன இங்கு!! (மகர)


கனவினில் வந்தவன் கண்ணனா கந்தனா என்ற சர்ச்சை முற்றும்!